கொள்ளிடம், நவ.1: கொள்ளிடம் பகுதியில் உள்ள சத்துணவு மையங்களுக்கு புதியதாக எரிவாயு அடுப்பு வழங்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம். கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளில் சத்துணவு மையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு சத்துணவு சமைப்பதற்கு விறகு அடுப்புகள் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் சுற்றுப்புற சுகாதாரத்தை பாதிக்காத வகையிலும், சத்துணவு சமையலர்கள் மற்றும் அமைப்பாளர்கள் சிரமமின்றி சமையல் செய்து குழந்தைகளுக்கு உணவு வழங்கிடவும் அரசு சார்பில் புதியதாக எரிவாயு அடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள அனைத்து சத்துணவு மையங்களுக்கும் புதிய எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டன. இந்த அடுப்புகள் அந்தந்த பகுதியில் உள்ள சத்துணவு மையங்களின் அமைப்பாளர்களிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் வழங்கப்பட்டது.
