நாகப்பட்டினம், ஆக 1: நாகப்பட்டினம் தபால் கோட்ட கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணன் வௌியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தபால் துறையின் மென்பொருள் வரும் 4ம் தேதி முதல் தரம் உயர்த்தப்பட உள்ளது. இந்த புதிய தரம் உயர்த்தப்பட்ட மென்பொருளில் கியூஆர் மூலம் பணம் செலுத்தும் வசதி உள்பட பல்வேறு வசதிகள் அறிமுகம் செய்யபடவுள்ளது. புதிய மென்பொருள் பயன்பாடு எந்தவித சிரமமும் இன்றி செயல்படுத்த நாளை பரிவர்த்தனைகள் இல்லா நாளாக அறிவிககப்பட்டுள்ளது.
இதனால் நாகப்பட்டினம், திருவாரூர் தலைமை தபால் அலுவலகங்கள், காரைக்கால் NDT மற்றும் இந்த தலைமை அலுவலகங்களுக்கு உட்பட்ட அனைத்து துணை மற்றும் கிளை தபால் அலுவலகங்களில் அஞ்சலக சிறுசேமிப்பு கணக்குகளில் முதலீடு செய்வது மற்றும் கணக்கில் இருந்து பணம் எடுப்பது ஆகிய சேவைகளை பெற முடியாது. மேலும் பதிவு தபால், விரைவு தபால் மற்றும் காப்பீட்டுபிரிமியம், பார்சல் அனுப்புவது, தொகை செலுத்துதல் போன்ற சேவைகளும் பெற இயலாது. எனவே வாடிக்கையாளர்கள் தங்களது தபால் பரிவர்த்தனையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.