நாகப்பட்டினம், ஜூலை 24: காரையூர் புனித அன்னம்மாள் ஆலய தேர்பவனி சிறப்பாக நடைபெற்றது.
திருமருகல் அருகே காரையூர் கிராமத்தில் புனித அன்னம்மாள் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்று வந்தது. ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புனித அன்னம்மாள் எழுந்தருளினார்.
முன்னதாக ஆலய அதிபர் அருள் சுரேஷ் தலைமையில் கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது. பின்னர் தேரினை புனிதம் செய்து தொடங்கி பவனியை வைத்தார். ஆலய வளாகத்தில் இருந்து இசை வாத்தியங்கள் முழங்க தேர் பவனி தொடங்கியது. பவனியானது கண்கவர் வான வேடிக்கைகளோடு முக்கிய வீதிகளில் வலம் வந்தது. தேர்பவனியின் போது ஒவ்வொரு வீடுகளிலும் கிறிஸ்தவர்கள் கைகளில் மெழுவர்த்தி ஏந்தி தேரினை வரவேற்று புனித அன்னம்மாளுக்கு மாலை அணிவித்து சாம்பிராணி காட்டி பிரார்த்தனை செய்தனர்.