நாகப்பட்டினம், நவ.28:மழையினால் சேதம் அடையும் நெற்பயிரை நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொண்டு அதிக மகசூல் பெற வேண்டும் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கன மழை பெய்தது. அதிகமாக மழை பெய்யும் இடங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடையும். இவ்வாறு சேதம் அடையும் நெற்பயிரை பாதுகாக்க விவசாயிகள் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில் உடனடியாக வடிகால் வசதியை ஏற்படுத்தி நீரினை வடித்து, வேர்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெற்பயிர் நீரில் மூழ்கி இருந்தால் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஊட்டச்சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நீர் வடிந்த பிறகு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சத்துடன், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து, இரவு முழுவதும் வைத்திருந்து தண்ணீர் வடிந்தவுடன் வயலில் இட வேண்டும்.
போதிய சூரிய வெளிச்சம் தென்பட்டவுடன், ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன், ஒரு கிலோ துத்தநாக சல்பேட்டை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் இலைவழி உரமாக தெளிக்க வேண்டும். இதுதொடர்பாக கூடுதல் தகவல் பெற விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள வேளாண் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு மகசூலை அதிகரித்து பயன்பெறலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

