வேதாரண்யம், நவ.28: நாகை மாவட்டம் கோடியக்கரையில் மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் படகுகளை கடற்கரையிலிருந்து அரைகிமீட்டர் தூரத்திற்கு டிராக்டர் வைத்து தள்ளிச்சென்று பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவாக உள்ள நிலையில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இதைஅடுத்து நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதிகளில் உள்ள வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடந்த இரண்டு தினங்களாக கடலுக்கு செல்லவில்லை.
இந்நிலையில் நாளை முதல் 3 நாட்கள் அதி கனமழை பெய்யும் என்பதால் ஏற்கனவே தங்கிளன் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் புயல் எச்சரிக்கை அறிவிப்பால் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகுகள் கடல் சீற்றத்தால் படகுகள் சேதம் அடையாமல் இருப்பதற்காக டிராக்டரை கொண்டு கடற்கரையில் இருந்து வெகு தொலைவிற்கு (சுமார் அரைகிலோமீட்டர் தூரம்) கொண்டு சென்று பாதுகாக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று மீன்பிடி வலைகள், படகு என்ஜின்களையும் பாதுகாப்பான இடங்களில் வைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். கோடியக்கரையில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

