கொள்ளிடம், நவ. 26: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பச்சபெருமாள்நல்லூர் கிராமத்தில் கொள்ளிடம் வட்டார வேளாண்துறை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கரிம வேளாண்மை விதை சான்று பெறுதல் பயிற்சி நடைபெற்றது. வட்டார வேளாண் உதவி இயக்குனர் எழில்ரஜா தலைமை வகித்தார். அட்மா திட்ட மேலாளர் அரவிந்தன் வரவேற்றார். விதை சான்று அலுவலர் கண்ணன் கலந்து கொண்டு தொழில்நுட்பம், நிலம் தேர்வு, விதை தேர்வு, களை நிர்வாகம், உர மேலாண்மை, பூச்சி நோய் மேலாண்மை உள்ளிட்ட தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளித்தார்.
விவசாயிகள் அரசுக்கு அங்கக வேளாண்மை முறையில் விதை நெல் வழங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண் அலுவலர்கள் சந்தோஷ்குமார், செல்வம், வேளாண்மை உதவி அலுவலர் விஜய் அமிர்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு அரசின் திட்டங்கள் மற்றும் வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கி கூறினர். பயிற்சியில் 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் பார்த்திபன், சந்தோஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

