குத்தாலம் பேரூராட்சியில்ரூ.2.96 கோடி மதிப்பீட்டில் கலைஞர் மு.கருணாநிதி புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி துவக்கம்
குத்தாலம், டிச.11: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பேரூராட்சியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் (2025-2026) கீழ் ரூ.2.96 கோடி மதிப்பீட்டில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளுக்கு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் பூம்புகார் நிவேதா எம்.முருகன், சீர்காழி எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை தொகுதி ராஜகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி தலைமை வகித்தார்.
விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்பேரில், குத்தாலம் பேரூராட்சியில், ரூ.2.96 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் இன்று (நேற்று) நாட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், பழைய பேருந்து நிலையங்களை புதுப்பித்தல், புதிதாக மார்க்கெட் அமைத்தல், சாலை வசதிகள் ஏற்படுத்துதல், தெருவிளக்குகள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குத்தாலம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை பணிகள், பள்ளி மேம்பாடு, நவீன எரிவாயு தகனமேடை, புதிய வணிகவளாகங்கள் கட்டுதல், புதிய பாலம் கட்டுதல், குளங்கள் பராமரிப்பு, நாய் கருத்தடை மையம் கட்டுதல் என ரூ.36 கோடியே 18 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குத்தாலம் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) மாஹீன்அபுக்கர், முன்னாள் எம்எல்ஏக்கள் குத்தாலம் கல்யாணம், மயிலாடுதுறை ஜெகவீரபாண்டியன், குத்தாலம் க.அன்பழகன், பேரூராட்சி தலைவர் சங்கீதா, பேரூராட்சி துணைத் தலைவர் சம்சுதீன், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், மங்கை சங்கர், ராஜா, அரசு வழக்கறிஞர் ராமசேயோன், முன்னாள் ஒன்றிய தலைவர்கள் மனோகரன், பேரூராட்சி இளநிலை உதவியாளர் சுந்தர் மகேந்திரன் உள்பட வணிகர் சங்கத்தினர், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


