Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மணக்குடி ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

மயிலாடுதுறை, செப்.2: மயிலாடுதுறை வட்டம் மணக்குடி ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்க விழா மாவட்ட கலெக்டர் காந்த் தலைமையில், எம் பி சுதா, எம்எல்ஏக்கள் நிவேதா முருகன்,ராஜகுமார் முன்னிலையில் நடைபெற்றது.மயிலாடுதுறை மாவட்டம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கரீப் கொள்முதல் பருவம் 2025-26 ம் ஆண்டிற்கான நெல் கொள்முதல் பணி 01.09.2025 முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக விவசாயிகளிடமிருந்து நெல் மணிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது.மயிலாடுதுறை வட்டத்தில் 36 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், குத்தாலம் வட்டத்தில் 41 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், தரங்கம்பாடி வட்டத்தில் 32 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் சீர்காழி வட்டத்தில் 31 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஆக கூடுதல் 140 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளது.

கொள்முதல் செய்யப்படும் நெல் மணிகள் சன்ன ரகம் குவிண்டால் ஒன்றிக்கு ரூ.2,545-ம், அரசின் குறைந்த பட்ச ஆதார விலை ரூ.2,389-ம், ஊக்கக்தொகை ரூ.156-ம், பொது ரகம் குவிண்டால் ஒன்றிக்கு ரூ.2,500-ம், அரசின் குறைந்த பட்ச ஆதார விலை ரூ.2,369-ம். ஊக்கக்தொகை ரூ.131-ம் வழங்கப்படுகிறது. விவசாயிகளின் நலனைக்கருத்தில் கொண்டு பயோமெட்ரிக் கருவி மூலம் விரல் ரேகை பதிவதன் மூலமும், ஆதார் எண்ணில் பதிந்திருக்கும் கைபேசி எண்ணுக்கு OTP பெறுவதன் மூலமும் விவசாயிகளின் விவரத்தை பதிவு செய்து நெல் மூட்டைகளை விற்பனை செய்து பயன் பெறலாம்.விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்திற்கு வரும் போது ஆதார் அட்டை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் நிலத்திற்குரிய பட்டா மற்றும் சிட்டா அடங்கிய ஆவணங்களுடன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விற்பனை செய்து பயன்பெறலாம்.

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்குரிய தொகையினை விவசாயிகளின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை முறையில் உடனுக்குடன் தொகை வரவு வைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

இதில் டிஆர்ஓ உமாமகேஷ்வரி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் நலினா, வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர் மற்றும் முன்னால், இன்னால் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.