நாகப்பட்டினம், நவ.18: நாகப்பட்டினம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்திருப்பதாவது: ஒன்றிய அரசின் ஓய்வூதியதாரர்கள், மாநில அரசின் ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள் மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள் கடந்த நவம்பர் 1ம்தேதி முதல் தங்கள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. நேரில் சென்று உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில் தபால்துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே தபால்காரர்கள் மூலம் பயோமெட்ரிக் அல்லது பேஸ் ஆர்டி ஆப் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும். எனவே ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், செல்போன் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். இந்த டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள தபால் அலுவலகம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த சேவையை வழங்க அனைத்து தபால் அலுவலகங்களிலும் கடந்த 1ம் தேதி முதல் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.


