கொள்ளிடம், அக்.14: கொள்ளிடத்தில் மாயமான பள்ளி சிறுமியை இரண்டு மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி கொள்ளிடத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். வழக்கம்போல வகுப்புக்கு செல்லும் மாணவி நேற்று பள்ளிக்குச் செல்லாமல் மாயமானார். இதுகுறித்து மாணவியின் தந்தை கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி டிஎஸ்பி அண்ணாதுரை மற்றும் போலீசார் கொள்ளிடம் பகுதிக்கு நேரில் வந்து ஒவ்வொரு இடமாக சென்று கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் சிறுமி கொள்ளிடத்தில் உள்ள அவரது தோழி ஒருவரின் வீட்டில் இருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிறுமியை மீட்டு ஒப்படைத்த போலீசாருக்கு பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.
சிறுமி மாயமான இரண்டு மணி நேரத்திற்குள் மீட்டு ஒப்படைத்த போலீசாருக்கு அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் பாராட்டு குவிந்த வண்ணம் இருந்து வருகிறது.