Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

விண்வெளி சார்ந்த தொழில்நுட்பங்களுடன் பெரம்பூரில் ₹5 கோடி மதிப்பீட்டில் முரசொலி மாறன் அறிவியல் பூங்கா: இறுதிகட்ட பணிகள் மும்முரம்

சென்னை, அக்.29: பெரம்பூரில் அமைக்கப்படும் முரசொலி மாறன் அறிவியல் பூங்கா விரைவில் திறக்கப்படவுள்ளது. விண்வெளியில் மிதப்பது போன்ற சுவாரஸ்ய அனுபவங்களை அளிக்கும் இந்த பூங்கா பயன்பாட்டுக்கு வந்தால் மாணவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து விடுவார்கள், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றில் மாணவ, மாணவிகளுக்கு ஆர்வத்தை தூண்டும் அறிவார்ந்த புதிய விஷயங்களை தெரிந்துகொள்ள வசதியாக, பெரம்பூரில் முரசொலி மாறன் அறிவியல் பூங்கா ஒன்று அமைக்கப்படுகிறது. இதை ஸ்டெம் பார்க் என்று அழைக்கின்றனர்.

இதில் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் விஷயம் விண்வெளி சார்ந்த விஷயங்கள்தான். உள்ளே சென்றதும் விண்வெளியில் மிதப்பது போன்ற அனுபவம், சுற்றிலும் கோள்கள் சுற்றி வரும் காட்சிகள், இங்கும் அங்கும் சுற்றி வரும் செயற்கைக் கோள்கள், மிதக்கும் விண்வெளி நிலையம், நட்சத்திர கூட்டங்களை காண உதவும் டெலஸ்கோப் ஆகிய விஷயங்களை கற்பனை செய்து பார்க்கலாம். இந்த பூங்கா அறிவு பசியை போக்குவது மட்டும் இன்றி, குழந்தைகளுக்கு புதுவித அனுபவத்தையும் அளிக்கும். குறிப்பாக இஸ்ரோவின் சந்திரயான், மங்கள்யான் உள்ளிட்ட செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட்கள் எப்படி செயல்படுகின்றன, உள்ளிருக்கும் தொழில்நுட்ப அம்சங்கள் என்னென்ன போன்றவற்றுக்கு மிகவும் நுணுக்கமான முறையில் விளக்கம் அளிக்க உள்ளன.

இதுதவிர ரோபோ கார்கள், மினி ஹூமனாய்டுகள் ஆகியவற்றை கண்டும், பயன்படுத்தியும் பார்க்கலாம். இதற்கென பிரத்யேகமாக கணினி ஆய்வகம் ஒன்று அமைக்கப்படுகிறது. இத்தகைய அனுபவங்களை வழங்கும் வகையில் இந்த அறிவியல் பூங்கா அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை ₹5 கோடி நிதியில் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இந்தப் பூங்காவில் அறிவியல் சார்ந்த சிக்கலான கோட்பாடுகளை மிகவும் எளிமையாக விளக்க உள்ளனர். மேலும் புதிய தொழில்நுட்பங்கள், பொறியியல் சார்ந்த விஷயங்கள், கணித பயன்பாடுகள் உள்ளிட்டவற்றையும் கண்டு மகிழலாம்.

இத்தகைய முன்னெடுப்புகள் அறிவியல் மீதான மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும். குறிப்பாக ஐஐடி, என்ஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு கதவுகளை திறந்துவிடும். இதுதொடர்பான வழிகாட்டுதல்களும் இடம்பெறவுள்ளன. இவ்வளவு சிறப்புகள் கொண்ட அறிவியல் பூங்கா அடுத்த 2 மாதங்களில் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக உயர்க்கல்வி மாணவர்களை மையமாக வைத்து ஒரு நாளைக்கு ஒரு பள்ளியை பூங்காவிற்கு கொண்டு வர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பணிகள் முடிந்ததும் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.