Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

3 பெண் குழந்தைகளை கொன்ற தாய்க்கு 3 ஆயுள் தண்டனை

கடலூர், ஜூன் 28: விருத்தாசலம் தாலுகா சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (44). இவரது மனைவி சத்தியவதி (34). இவர்களுக்கு அட்சயா(6), நந்தினி (4), தர்ஷினி (2) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர். மணிகண்டன் தினமும் குடித்துவிட்டு சத்தியவதியுடன் தகராறு செய்து வந்ததால், சத்தியவதி தன் கணவருடன் கோபித்துக்கொண்டு கடந்த 24.0.2019 அன்று புவனகிரி தாலுகா கீழ்மணக்குடி கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.

கடந்த 2.10.2019 அன்று மணிகண்டன் சத்தியவதிக்கு போன் செய்து, பெரிய மகள் அட்சயாவிற்கு பள்ளிக்கூடம் இருப்பதால் வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். இதையடுத்து சத்தியவதி குழந்தைகளுடன் சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவி கிராமத்தில் உள்ள மணிகண்டனின் சித்தப்பா வீட்டிற்கு வந்துள்ளார். இதன் பின்னர் மணிகண்டன் சத்தியவதியை வீட்டிற்கு வரும்படி அழைத்ததால் அன்று மாலை சேத்தியாதோப்பு கூட்டுரோட்டிற்கு குழந்தைகளுடன் வந்துள்ளார்.

அப்போது கணவருடன் வாழ பிடிக்காததால், குழந்தைகளை சாகடித்துவிட்டு தனியாக சென்று வாழலாம் என முடிவு செய்துள்ளார்.  இதையடுத்து தனது மூத்த பெண் குழந்தையான அட்சயாவை முதலில் தூக்கி ராஜன் வாய்க்காலில் தண்ணீர் ஓடும் பகுதியில் வீசி உள்ளார். அதன் பின் மற்ற இரண்டு பெண் குழந்தைகளான நந்தினி, தர்ஷினி ஆகியோரை அதே பகுதியில் தூக்கி போட்டதால் மூன்று பெண் குழந்தைகளும் தண்ணீரில் தத்தளித்து மூச்சுத்திணறி இறந்துள்ளனர்.

இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து சத்தியவதியை கைது செய்தனர். மேலும் அவர் மீது கடலூர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சாட்சிகள் விசாரணை நடந்து வந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் நீதிபதி குலசேகரன் தீர்ப்பு கூறினார். தீர்ப்பில் சத்தியவதி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 3 ஆயுள் தண்டனையும், ரூ.3000 அபராதமும் விதித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் வளர்மதி ஆஜராகி வாதாடினார்.