இலுப்பையூர் கிராமத்தில் ரூ.1.20 கோடியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம்: அமைச்சர் துவக்கி வைத்தார்
திருச்சுழி, ஜூலை 9: திருச்சுழி அருகே இலுப்பையூர் கிராமத்தில் ரூ.1.20 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார். திருச்சுழி அருகே உள்ள இலுப்பையூர் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சரால் ரூ.1.20 கோடி மதிப்பில் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்ட புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் கபுத்ரா தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குத்துவிளக்கேற்றி மருத்துவ சேவைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.
பின்னர், மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கான மருந்து பெட்டகங்களையும், தாய்மார்களுக்கு தாய் சேய் நலப் பெட்டகங்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், சந்தனபாண்டி, இசலி ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், முன்னாள் ஒன்றிய தலைவர் ஜெயராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.