Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா: திருக்கல்யாணம், தேரோட்டத்திற்கு முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம்

மதுரை, ஏப். 23: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, தேர்கள் தயார்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரை திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிறது. விழாக்காலங்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் - பிரியாவிடை மதுரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். வீதி உலாவின் போது சிறுவர், சிறுமிகள் கடவுள் வேடமணிந்து கோலாட்டம் ஆடுவத்றாக, ஆடைகள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக்குவிஜயம் போன்ற வைபவங்களை தொடர்ந்து 10ம் திருநாளான திருக்கல்யாணம் மே 8ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பூக்களை கொண்டு வண்ண மயமான பந்தல் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. தொடர்ந்து அன்னதானம், மொய் விருந்து போன்றவைக்கான முன் ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

சித்திரை திருவிழாவின் மற்றொரு முத்தாய்ப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் மே 9ம் தேதி விமரிசையாக நடைபெறும். அப்போது மீனாட்சி அம்மன் மற்றும் பிரியாவிடையுடன் சொக்கநாதர் முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படி, ராமநாதபுரம் சேதுபதி மகாராஜா மண்டகப்படிக்கு எழுந்தருள்வர். அங்கு சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து ஒரே பல்லக்கில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் கீழமாசி வீதியில் உள்ள தேரடிக்கு அழைத்து வரப்படுவர். அங்கு தீபாராதனைகள் நடத்தப்பட்டு, பிரியாவிடை- சுந்தரேசுவரர் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருள்வர். இதன் தொடர்ச்சியாக அங்குள்ள கருப்பண சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, தொடர்ந்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்து செல்லுவார்கள்.

தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் நிலையில் இரு தேர்களும், 4 மாசி வீதிகளில் அசைந்தாடி வலம் வரும். இந்த தேர்களுக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட யானை செல்லும். இதையடுத்து விநாயகர், முருகன், நாயன்மார்கள் தனித்தனி சப்பரங்களில் பின் செல்ல, பகல் 12 மணியளவில் தேர்கள் நிலையை வந்தடையும். இதற்காக தேரடி வீதியில் உள்ள இரு தேர்களையும் தயார் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக தேர்களின் பாதுகாப்புக்கான போடப்பட்டிருந்த கூரைகள் அகற்றப்பட்டு, சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் பக்தர்கள் தேர்களை இழுத்துச்செல்ல வசதியாக புதிய வடம் வந்து சேர்ந்துள்ளது. கோயில் அதிகாரிகள் கூறுகையில், ‘‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் முன்னதாக சித்திரை திருவிழா வரும் 29ம் தேதி துவங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது. திருக்கல்யாணம் மற்றும் மாசி வீதிகளில் பக்தர்கள் அமர பந்தல்கள் அமைக்கப்பட்டு, மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ரூ.500 மற்றும் ரூ.200 டிக்கெட்டுகள் மற்றும் இலவச டோக்கன் என 12 ஆயிரம் பக்தர்கள் திருக்கல்யாண வைபவத்தை நேரில் தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. திருக்கல்யாணம் நிறைவில் பக்தர்கள் மொய் செலுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கான பிரசாத பைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது’’ என்றனர்.