மதுரை, மார்ச் 27: சிவகங்கையில் டாக்டர் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, மதுரையில் 100க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் மீது பாலியல் வன்கொடுமை தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தை கண்டிக்கும் விதமாகவும், பயிற்சி மருத்துவர்களுக்கு அடிப்படை வசதியுடன் உரிய பாதுகாப்பு செய்து தரக்கோரியும் மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு குடியிருப்பு மருத்துவர்கள் சங்கம் சார்பில் 100 க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் டாக்டர் கீர்த்தி வர்மன் கூறும்போது, ‘‘பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி கேமராக்கள், பாதுகாவலர்கள், இரவு ரோந்து உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, 2008ம் ஆண்டு முன்மொழியப்பட்ட மருத்துவர்களுக்கான தனிச்சட்டத்தை ஒன்றிய, மாநில அரசுகள் கொண்டு வர வேண்டும்’’ என்றார்.