நாகர்கோவில், ஜூலை 23: மருத்துவ இயக்குநரக உயர்நிலை குழு ஆகஸ்ட் முதல் வாரம் குமரி மாவட்டம் வருகை தருகிறது. தமிழ்நாடு அரசின் உத்தரவின் அடிப்படையில், ஒன்றிய மற்றும் மாநில அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் நலத்திட்டங்கள் பொதுமக்கள் அனைவருக்கும் சிறப்பான முறையில் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக, தேசிய நலக்குழுமம், மருத்துவ இயக்குநரகம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையைச் சேர்ந்த 26 பேர் கொண்ட உயர் நிலை குழு, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர் அரவிந்த் தலைமையில் நேற்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தருவதாக இருந்தது. இந்த நிலையில் இந்த குழுவின் வருகை ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் மருத்துவம் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை நேரில் பார்வையிட்டு, செயல்திறன் மற்றும் பயன்திறனை மதிப்பீடு செய்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். ஒன்றிய மற்றும் மாநில அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் அனைத்து முக்கிய நலத்திட்டங்களும் விரிவாக ஆய்வு செய்யப்படவுள்ளது. சுகாதார கட்டமைப்பு, மருத்துவ சேவைகள் பொதுமக்களை முறையாக சென்றடைவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து குழுவினர் நேரில் பார்வையிட்டும் பொதுமக்களிடமும் நேரில் ஆய்வும் செய்ய உள்ளனர்.