Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மாவட்டத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைந்தது

கிருஷ்ணகிரி, ஏப்.11: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், உலக சுகாதார தினத்தையொட்டி நடந்த சிறப்பு கருத்தரங்கில், மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 33 ஆக குறைந்து உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், உலக சுகாதார தினத்தையொட்டி சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் பூவதி தலைமை வகித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சந்திரசேகன், துணை முதல்வர் டாக்டர் சாத்விகா, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர்கள் செல்வராஜ், மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், 2025ம் ஆண்டிற்கான ஆய்வுப் பொருள் ‘ஆரோக்கியமான தொடக்கங்கள், நம்பிக்கையான எதிர்காலங்கள்’ மையமாக வைத்து 8 உப தலைப்புகளில் கருத்தரங்கம் நடந்தது. இதில் முக்கிய கருத்தாக மகப்பேறு மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைப்பது மற்றும் தடுப்பது குறித்து விவாதங்கள் நடைபெற்றது. இதில், பங்கேற்ற மருத்துவ மாணவ, மாணவிகள், முதுநிலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கருத்தரங்கில், 2014ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்திய அளவில் மகப்பேறு இறப்பு விகிதம் 1 லட்சம் பேருக்கு 167 பேர் என்றும், ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 1000 குழந்தைகளுக்கு 39 பேர் என்றும் இருந்தது. தமிழ்நாடு அளவில் மகப்பேறு இறப்பு விகிதம், ஒரு லட்சம் பேருக்கு 66 பேர் என்றும், ஒரு வயத்திற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 1000 குழந்தைகளுக்கு 17 பேர் என்றும் இருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை, மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 60 பேர் என்றும், ஒரு வயத்திற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 1000 குழந்தைகளுக்கு 15 பேர் என்றும் இருந்தது. 2024ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, மருத்துவ துறைகளின் பல்வேறு முன்னெடுப்புகளால், உள்கட்டமைப்பு முதல் மருத்துவர்கள் மற்றும் இதர மருத்துவ பணியர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியானாலும், முழு ஈடுபாடு மற்றும் அயராத உழைப்பினாலும், மாதிரி பதிவு முறை தகவின்படி, இந்திய அளவில் மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 97 பேர் என்றும், ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு வகிதம் 1000 குழந்தைகளுக்கு 25 பேர் என்றும் உள்ளது.

தமிழ்நாடு அளவில் மகப்பேறு இறப்பு விகிதம், ஒரு லட்சம் பேருக்கு 40 பேர் என்றும், ஒரு வயத்திற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 1000 குழந்தைகளுக்கு 77 பேர் என்றும் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்த அளவில், மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 33 பேர் என்றும், ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 1000 குழந்தைகளுக்கு 8 பேர் என்றும் குறைந்துள்ளது. இவற்றை மேலும் குறைப்பது மற்றும் அக்காலகட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னேச்சரிக்கைகள் குறித்தும், தொப்புள் கொடி சேமிப்பு மற்றும் தாய்ப்பால் வங்கி குறித்தும் விரிவான விவாதங்கள் நடந்தது. மாணவ, மாணவிகளுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும், கடந்த ஆண்டு சமூக மருத்துவத்துறை பல்கலைக்கழக தேர்வில் சிறப்பு தேர்வு பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இணை பேராசிரியர் டாக்டர்.செல்வராஜ் நன்றி கூறினார். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக அலுவலர் சரவணன் தலைமையிலான சமூக மருத்துவத்துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.