குடியாத்தம், ஜூலை 28: குடியாத்தம் அருகே கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் தங்கசெயின் பறிக்க முயன்ற ஆசாமியை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன்(34), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் குடியாத்தம் செதுக்கரை பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை வழிமறித்த ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த தங்கசெயினை பறிக்க முயன்றார். அதிர்ச்சியடைந்த நீலகண்டன் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்களையும், அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டிவிட்டு தப்பிச்சென்றார். இதுகுறித்து பொதுமக்கள் குடியாத்தம் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். மேலும் மிரட்டிய நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், குடியாத்தம் ஜீவா நகரை சேர்ந்த ராஜா(41) என்பதும், இவர் பல்வேறு குற்றவழக்குகளில் ஈடுபட்டு பலமுறை சிறைக்கு சென்றவர் எனவும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.