மதுரை, அக். 31: திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் செய்து தரக்கோரிய வழக்கில் அரசுத் தரப்பில் பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வெரோனிக்கா மேரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மேலூர் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை வசதிகள் நடைமுறையில் உள்ளது. மேலூரை விட அதிக நபர்கள் சிகிச்சை பெறும் இடமாக திருமங்கலம் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. ஆனால் அங்கு போதிய வசதிகள் இல்லை.
எனவே, திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து வசதிகளோடு விபத்து மற்றும் அவசர கால மருத்துவ முறையை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர், மனுவிற்கு சுகாதாரத் துறைச் செயலர், ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குநர் உள்ளிட்டோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணயை தள்ளி வைத்தனர்.
 
  
  
  
   
