மதுரை, அக். 30: திண்டுக்கல் மாவட்டம் கரந்தமலை பகுதியில் உருவாகும் பாலாறு, செந்துறை, திருச்சி மாவட்டம் தெத்தூர் வழியாக கொட்டாம்பட்டி ஒன்றியம் பள்ளபட்டியை கடந்து சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு செல்கிறது. இதனுடன், சிறுமலையில் உருவாகும் உப்பாறு பல்வேறு ஊர்களை கடந்து சிங்கம்புணரியில் பாலாற்றுடன் கலந்து, அங்கிருந்து திருப்புத்தூர் பெரிய கண்மாயை அடைகிறது.
பாலாறு பயணிக்கும் திசையில் மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளபட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த தடுப்பணை கட்ட வேண்டுமென கோரிக்கை எழுந்து வந்தது. இதையேற்று, கடந்த ஜூலை மாதம், ரூ.7.70 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது.
இதையடுத்து, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு0, ஒப்பந்த பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, அடுத்த மாதம் இரண்டாவது வாரத்திற்குள் பணி ஆணை வழங்கப்பட்டு தடுப்பணை கட்டுமான பணிகள் தொடங்கும் என, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 28 மீட்டர் நீளத்தில் உருவாகும் தடுப்பணையால், 1.56 மி.கன அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும் என தெரிகிறது.
