மதுரை, ஆக. 27: அரசு போக்குவரத்துக் கழக ஏஐடியூசி ஓய்வு பெற்ற தொழிலாளர் சங்க மாநில நிர்வாகிகள் மற்றும் நிர்வாக குழு கூட்டம் நேற்று போக்குவரத்து கழக ஏஐடியூசி அலுவலகத்தில் நடந்தது. மாநில தலைவர் நாச்சிமுத்து தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் நாராயண சிங் வேலை அறிக்கை மற்றும் ஸ்தாபன அமைப்பு நிலை பற்றி பேசினார்.
இந்த கூட்டத்தில் விருதுநகர், காரைக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், குறைந்தபட்ச ஓய்வு ஊதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் பெறுவோரின் ஓய்வூதியத்தை குறைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்.9ல் மதுரையில் மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.