Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இலவச வீட்டுமனை பட்டா கோரி தாசில்தார் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்: வாடிப்பட்டியில் பரபரப்பு

வாடிப்பட்டி, செப். 26: இலவச வீட்டு மனை பட்டா வழங்கும்படி கேட்டு, வாடிப்பட்டி தாசில்தார் அலுவலகத்தில் குடியேற முயன்ற கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. வாடிப்பட்டி தாலுகா அலங்காநல்லூர் ஒன்றியம் கொண்டையம்பட்டி கிராமத்தில் வாசித்து வரும் ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு வாடிப்பட்டி தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தனர்.

கடந்த டிசம்பர் மாதம் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அதிகாரிகள் விரைவில் பட்டா வழங்கப்படும் என்று கூறி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் அதன்பிறகும் பட்டா கிடைக்காததால் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக உடனடியாக பட்டா வழங்க கோரி வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர். மேலும் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள் அங்கேயே உணவு சமைக்க துவங்கினர்.

இதையடுத்து வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பட்டா கிடைக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என, பொதுமக்கள் கூறியதுடன், மதிய உணவு சமைத்து சாப்பிட்டனர். பின்னர் நடந்த பேச்சு வார்த்தையின் முடிவில், இரண்டு மாத கால அவகாசத்தில் பட்டா வழங்கப்படும் என வருவாய்த்துறையினர் எழுத்து மூலமாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய குழு உறுப்பினர் பஞ்சாட்சரம் தலைமை வகித்தார். மதுரை புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்ட குழு உறுப்பினர் உமா மகேஸ்வரன், அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் தவமணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஞானவேல், மணல் பாண்டி, தனம், தங்கராசு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.