மதுரை, செப். 25: மதுரை, கோரிப்பாளையத்தில் மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் முன்பாக ஏயூடி - மூட்டா சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், பல்கலைக்கழக மானியக்குழு 7வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், தமிழக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பணி மேம்பாட்டுக்கான அரசாணை 2021ல் வௌியிடப்பட்டது. அரசுக்கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியம் நிலுவையுடன் வழங்கப்பட்டது.
ஆனால், அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு இணைப்பேராசிரியர் உள்ளிட்ட பணி மேம்பாட்டு ஆணை வழங்கியுள்ள நிலையில் ஊதியம் வழங்கப்படவில்லை. இதன்படி 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பணி மேம்பாட்டு ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும் என்று கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மண்டலத்திற்குட்பட்ட ஆசிரியர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.