தத்தனேரி மயான வளாகத்தில் குப்பை இடமாற்று நிலையம் அமைக்க தடை கோரி வழக்கு: மாநகராட்சி பதில் அளிக்க உத்தரவு
மதுரை, நவ. 22: மதுரை, தத்தனேரி மயான வளாகத்தில், நவீன குப்பை இடமாற்று நிலையம் அமைக்கும் பணிகளுக்கு தடை கோரி தாக்கல் ெசய்த வழக்கில், மாநகராட்சி தரப்பில் பதில் அளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த மணிகண்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தூய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ், தத்தனேரி மயான வளாகத்தில் ரூ.10 கோடியில் நவீன குப்பை இடமாற்று நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு பணிகள் ஏதும் மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படவில்லை. காற்று மற்றும் நீர் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் பெற வேண்டிய அனுமதி பெறப்படவில்லை. இந்த நவீன குப்பை இடமாற்று நிலையத்தில், நாளொன்றுக்கு 250 மெட்ரிக் டன் பிரிக்கப்பட்ட குப்பைகளைக் கையாளத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையம், மக்களின் குடியிருப்புக்கு மிக அருகில் உள்ளதுடன், சுகாதார சீர்கேட்டையும், வைகை ஆற்றை மாசுபடுத்துவதற்கும் வழிவகுக்கும். எனவே, மாநகராட்சியின் இந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர், மனுவிற்கு மாநகராட்சி ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை டிச.8க்கு தள்ளி வைத்தனர்.


