மதுரை, ஆக. 22: மதுரையில் கஞ்சா விற்பனை செய்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மதுரை மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிறப்பு எஸ்.ஐ நாகராஜன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சில வாலிபர்கள் அங்கு கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது.
அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மேலராங்கியத்தை சேர்ந்த தமிழரசன் (20), மதுரை திடீர் நகர் மாணிக்கம் (23), வாடிப்பட்டி அருகே தனிச்சியத்தை சேர்ந்த சூர்யா (23), சாமுவேல் (19), சிறுவானூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சந்தானம் (32) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.