திருப்பரங்குன்றம், ஆக. 21: மதுரையை அடுத்த நாகமலை புதுக்கோட்டை அருகே பில்லர் சாலை பகுதியில் ஹோட்டல் நடத்தி வருபவர் நர்மதா. இவருடைய கடையில் நேற்று மாலை புகுந்த மர்ம நபர்கள் சிலர் கடையில் இருந்த ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கடையில் வேலை செய்யும் பெண்கள் அதை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் கடையில் உள்ள பொருட்களை சூறையாடியதுடன், பெண் ஊழியர்களையும் தாக்கியுள்ளனர்.
இதை தடுக்க முயன்றதால் உரிமையாளர் நர்மதா, அவருடைய மகன் வினோ ஆகியோர் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. இதில் கடை ஊழியர்களான முத்து, ரேணுகா, சித்ரா ஆகியோர் காயமடைந்தனர். அங்குள்ள சிசிடிவியில் பதிவான இக்காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த சம்பவம் குறித்து, நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.