திருமங்கலம், நவ. 19: கள்ளிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட திருமால் கிராமத்தில் கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இந்த குவாரிகளால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவருவதாகவும் கூறி திருமால், புதூர், மொச்சிக்குளம், தூம்பக்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருமால் கிராமத்தின் வழியாக அதிகளவில் கல் மற்றும் மண் லோடுகளை ஏற்றி வந்த மூன்று லாரிகளை திருமால் - பாறைகுளம் ரோட்டில் திருமால் கிராம மக்கள் சிறைபிடித்தனர்.
தகவலறிந்த கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் லாரியை கூடக்கோவில் ஸ்டேசனுக்கு கொண்டுவந்தனர். இதனை தொடர்ந்து திருமால் மற்றும் சுற்றுவட்டார கிராமமக்கள் கூடக்கோவில் ஸ்டேசனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


