மதுரை, செப். 19: மதுரை பவர் ஹவுஸ் ரோட்டில் உள்ள, மதுரை தெற்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மதுரை பெருநகர் வட்டம், மேற்பார்வை பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி தலைமை வகித்தார். மின்வாரிய செயற்பொறியாளர் பாஸ்கரபாண்டி, உதவி செயற்பொறியாளர்கள், மின்பொறியாளர்கள், வருவாய் பிரிவு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மின் கட்டண பிரச்னை, வீட்டிற்கு அருகாமையில் மின் கம்பிகள் செல்வது, உயர்மின் அழுத்தம், குறைந்த மின் அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்பாக தெற்கு கோட்டத்திற்குட்பட்ட நுகர்வோர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க மேற்பார்வை பொறியாளர் உத்தரவிட்டார்.