மதுரை, செப். 19: மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் இதன் உப ேகாயில்களில் இருக்கும் உண்டியல்கள் நேற்றுதிறந்து எண்ணப்பட்டன. இதில் காணிக்கையாக ரூ.75 லட்சத்து 92 ஆயிரம் கிடைத்தது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணை கமிஷனர் கிருஷ்ணன் முன்னிலையில் நேற்று இக்கோயில் மற்றும் 10 உபகோயில்களின் நிரந்தர உண்டியல்கள் திறந்து, பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை கணக்கிடும் பணிகள் நடைபெற்றது.
இந்த பணியில் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், அவரது பிரதிநிதி, அறங்காவலர் சீனிவாசன், மதுரை, கள்ளழகர் கோயில் துணை கமிஷனர், கோயில் கண்காணிப்பாளர்கள், மதுரை தெற்கு மற்றும் கள்ளிக்குடி சரக ஆய்வர்கள், கோயில் பணியாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் பங்கேற்றனர்.
உண்டியல் காணிக்கைளை கணக்கிடும் பணிகள் முடிவுக்கு வந்த நிலையில், பக்தர்கள் செலுத்திய காணிக்கயைாக ரொக்கம் ரூ.75 லட்சத்து 92 ஆயிரத்து 604 இருந்தது. மேலும் பலமாற்று பொன் இனங்களாக 440 கிராம், பலமாற்று வெள்ளி இனங்களாக 439 கிராம் மற்றும் அயல் நாட்டு ரூபாய் நோட்டுக்கள் 275 எண்ணிக்கையில் இருந்தன.