மதுரை, அக். 18: மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 120 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளுக்கு இடையிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள செயற்கையிழை ஓடுதளத்தில் நடைபெற்றது. இதில் 800க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இப்போட்டியை பல்கலைக்கழக பதிவாளர் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். கணிதம் மற்றும் புள்ளியியல் துறை தலைவர் மயில்வாகனன் தலைமை தாங்கினார். இதில் 44 ஆண்கள் கல்லூரிகள் மற்றும் 47 பெண்கள் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் உற்சாகமுடன் பங்கேற்றனர். முடிவில் ஜிடிஎன் கல்லூரி அணி ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றது. 2வது இடத்தை மதுரை அமெரிக்கன் கல்லூரி வென்றது.
பெண்கள் பிரிவில் மதுரை லேடிடோக் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாவது இடத்தை ஜிடிஎன் கல்லூரி வென்றது. பல்கலைக்கழக உடற்கல்வித் துறை தலைவர் ரமேஷ், தொலைதூரக் கல்வி இயக்குநர் முத்துப்பாண்டி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். சிவகாசி கல்லூரி உடற்கல்வி இயக்குநர் விஜயகுமாரி நன்றி கூறினார்.

