மதுரை, அக். 17: மதுரையில் ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மதுரை மாவட்ட ஜாக்டோ - ஜியோ சார்பில் புதிய ஓய்வுதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து ஆசிரியர்களை பாதுகாத்திட சீராய்வு மனு உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், 21 மாத ஊதியமற்ற நிலுவைத் தொகையை வழங்குதல், பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புதல் ஆகியவற்றை விரைந்துமேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றோர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.