மதுரை, செப். 17: மதுரை காமராஜர் பல்கலை கல்லூரியில் தொகுப்பூதிய ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 3வது நாளாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொகுப்பூதிய ஆசிரியர்களையும் உதவி பேராசிரியராக மாற்றி யுஜிசி விதியின்படி ஊதியம் வழங்க வேண்டும், மணிநேர அடிப்படையிலான ஊதியத்தை உயர்த்திட வேண்டும், இபிஎப் 17 மாதத்திற்கு உரிய நிலுவை தொகையினை உடனடியாக செலுத்த வேண்டும்,
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். மதுரை காமராசர் பல்கலை கல்லூரி மற்றும் உறுப்பு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து தொகுப்பூதிய ஆசிரியர்கள் இணைந்து கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி எந்த வித பேச்சுவார்த்தைக்கும் உடன்படாததையடுத்து இன்று கல்லூரி முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிடுகின்றனர்.