மதுரை, டிச. 15: அழகர்கோயிலில் வார விடுமுறை மற்றும் நடப்பு ஆண்டிற்கான கடைசி முகூர்த்த நாளை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இவர்கள் அழகர்கோயில் மலைமேல் உள்ள நூபுர கங்கையில் புனித நீராடி அங்குள்ள ராக்காயி அம்மனுக்கு நெய் விளக்கேற்றி தரிசனம் செய்தனர். பின்னர் அடிவாரம் வரும் வழியில் உள்ள ஆறாம் படைவீடான சோலைமலை முருகன் கோயிலில் தரிசனம் செய்தனர். இதன் தொடர்ச்சியாக அடிவாரத்தில் சுந்தரராஜப் பெருமாள், தேவியரை தரிசனம் செய்தனர்.
இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு பெருமாள் அருள் பாலித்தார். கோயிலின் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதியில் ஏராளமான பக்தர்கள் சந்தனம் மற்றும் மாலைகள் சாற்றி வழிபட்டனர். மேலும் நேற்று கடைசி முகூர்த்த தினம் என்பதால் ஏராளமானோர் பொங்கல் வைத்தும், கிடாய் வெட்டியும், மொட்டை அடித்தும், தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் காது குத்து மற்றும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


