மதுரை, டிச. 15: மதுரையில் தண்ணீர் என நினைத்து, கரையான் மருந்தை குடித்த பெயின்டர் பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை, கே.புதூர் விஸ்வநாதன் நகர் அண்ணா தெருவை சேர்ந்தவர் முத்துராமன்(56). இவர் பெயின்டராக வேலை செய்து வந்தார். இதற்கிடையே மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான இவர், தொடர்ந்து குடித்து வந்ததால் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் குழந்தைகளை தன்னுடன் அழைத்துக்கொண்டு, மனைவி பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில், சம்பவத்தன்று ஆத்திகுளம் ஐ.டி காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் முத்துராமன் பெயின்டிங் வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தாகம் எடுத்ததால், அருகில் உள்ள பாட்டிலில் இருந்த கரையான் மருந்தை தண்ணீர் என நினைத்து தவறுதலாக குடித்து விட்டார்.
இதனால் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய முத்துராமனை, அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


