மேலூர், அக். 13: மேலூர் அருகே நடைபெற்ற இரண்டு மாட்டு வண்டி பந்தயத்தில் எல்லையை நோக்கி 46 ஜோடி காளைகள் சீறிப்பாய்ந்ததை திரளான ரசிகர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.
மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டியில், 7ம் ஆண்டு மாட்டு வண்டி பந்தயம் முசுண்டகிரிப்பட்டி முதல் ஆமூர் விலக்கு வரை நேற்று நடைபெற்றது. இதில் பெரிய மாடுகள் பிரிவில் 13 வண்டிகள் பங்கேற்றன. முடிவில் சூரக்குண்டு அமர்நாத், வேட்டையன் முதலிடம், நரசிங்கம்பட்டி முத்துராமலிங்கம், பத்திரகாளி 2ம் இடம், கல்லணை விஸ்வா, ரவிச்சந்திரன் 3ம் இடம், கள்ளந்திரி சிவபிரபு, பாண்டியராஜன் 4ம் இடம் பெற்றனர்.
சிறிய மாடுகள் பிரிவில் 33 ஜோடிகள் கலந்து கொண்டதால், போட்டி இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது.வெற்றி பெற்ற அனைத்து காளைகளின் உரிமையாளருக்கும் பரிசு தொகை, கேடயம் வழங்கப்பட்டது.
சாலையின் இருபுறமும் திரண்டு நின்றிருந்த ரசிகர்கள், மாட்டுவண்டி பந்தயத்தை உற்சாகமாக கண்டு களித்தனர். மேலூர் மற்றும் ஒத்தக்கடை போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.