மதுரை, செப். 12: மதுரை அரசு பள்ளியில் பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. பாரதியாரின் 104வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை எல்கேபி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பாரதியார் குறித்த வினாடி வினா போட்டி நடந்தது. பாரதியாரின் பாடல்கள் சுதந்திர தாகத்தை தூண்டி, மக்கள் மத்தியில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்த உத்வேகத்தை ஏற்படுத்தியது.
சுதந்திர போராட்ட வீரரான மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இதன்படி, பாரதியாரின் வாழ்க்கை வரலாறு, சுதந்திர போராட்டத்தில் அவரின் பங்கு, பாரதியாரின் கவிதைகள், பெண் விடுதலை குறித்த வினாடி வினா போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பாரதியார் குறித்து ஆசிரியர்கள் பலரும் மாணவர்கள் மத்தியில் சிறப்புரை நிகழ்த்தினர்.