மதுரை, செப். 12: மதுரை மாவட்டத்தில், பொது விநியோகத்திட்ட சேவைகள் தொடர்பாக பொது மக்களுக்கான குறைதீர் முகாம் நாளை (செப்.13) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில் மாதந்தோறும் பொதுமக்களுக்கான ரேஷன் பொருட்கள் வழங்கல் தொடர்பான குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி நாளை (செப்.12) குடிமைப் பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இந்த முகாம் நடத்தப்படுகிறது.
இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்தல், கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் கார்டுகளை இழந்தவர்கள் நகல் அட்டை கோருதல், செல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம் குறித்து விண்ணப்பிக்கலாம். மேலும் ரேஷன் பொருட்களை தனியார் சந்தையில் விற்பது உள்ளிட்ட சேவை குறைபாடுகள் குறித்தும் புகார் மனுக்களை நேரடியாக முகாம் அலுவலரிடம் வழங்கலாம். இத்தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.