மதுரை, செப். 12: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக விடுப்பு எடுத்தவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு முருகையன் தலைமை வகித்தார். சிபிஎஸ் மாநில ஒருங்கினைப்பாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தின் போது, புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பணிக்கொடை வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் அக்.16ம் தேதி மாவட்ட அளவில் மறியல் போராட்டத்திலும், அதனை தொடர்ந்து நவ.15ம் தேதி சென்னையில் பேரணி உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.