உசிலம்பட்டி, நவ. 11: மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயர் சூட்டக்கோரி, உசிலம்பட்டியில் பாரதிய பார்வட் ப்ளாக் கட்சியினர் சார்பில் சத்தியாக்கிரக போராட்டம் நடத்தப்பட்டது. மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்றுஒன்றிய அரசிடம் பார்வட் ப்ளாக் அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக உசிலம்பட்டி தேவர் சிலை பகுதியில் பாரதிய பார்வட் ப்ளாக் தலைவர் முருகன்ஜி தலைமையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று சத்தியாக்கிரக போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஆதரவாக அகில இந்திய பார்வட் ப்ளாக், மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், அங்குள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி முன்பாக அமர்ந்து, அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையில் 100க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் போராட்டத்தினை கைவிடும்படி அதில் பங்கேற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை அவர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து முருகன்ஜி கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார். பின்னர் மாலையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

