Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கள்ளிக்குடி அருகே 108 ஆம்புலன்சில் நடந்தது பிரசவம்: அழகிய ஆண் குழந்தை பிறந்தது

திருமங்கலம், செப். 11: கள்ளிக்குடி தாலுகா திருமால் அருகேயுள்ள சோழபுரத்தினை சேர்ந்தவர் காட்டுராஜா(28). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி(23). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் ராஜலட்சுமி மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று காலை வீட்டில் பிரவசவலி ஏற்பட்டது. உடனே உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியிலிருந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பிரசவ வலியால் துடித்த ராஜலட்சுமியை ஏற்றிக்கொண்டு, கூடக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புறப்பட்டு சென்றனர். திருமால் கிராமத்தின் அருகே சென்றபோது பிரசவவலி அதிகரித்து ராஜலட்சுமி துடிக்கவே, ஆம்புலன்சில் வந்த மருத்துவ உதவியாளர் மகேந்திரன் பிரசவத்திற்கான உதவிகளை செய்தார்.

இதன் வாயிலாக ஆம்புலன்சிலேயே ராஜலட்சுமிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயையும், சேயையும் கூடக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தாய், சேய் இருவரும் நலமுடன் இருப்பதாகவும், பிறந்த குழந்தை 3 கிலோ 300 கிராம் எடை உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து தாயையும் சேயையும் காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் மகேந்திரன், டிரைவர் தாமோதரக்கண்ணன் ஆகியோரை ராஜலட்சுமியின் உறவினர்கள், கிராமமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.