மதுரை, அக். 9: கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை எல்லீஸ் நகர் தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு தொழிலாளர் கொள்கையை வெளியிட வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் தருவதுடன், தொழிலாளர் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர். இதில் கலந்து கொண்ட இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் பாரதி, ஏஐடியூசி தேசிய கவுன்சில் உறுப்பினர் நந்தாசிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் சாமி, புறநகர் மாவட்ட செயலாளர் முத்துவேல் ஆகியோர் போராட்டத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினர். மாவட்ட நிர்வாகிகள் ஜோதி ராமலிங்கம், முருகன், பொருளாளர் ராமகிருஷ்ணன், மாதர் சம்மேளன மாவட்ட செயலாளர் ராஜலட்சுமி, மாவட்ட குழு உறுப்பினர்கள் பஞ்சாலை பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.