மதுரை, நவ. 7: தனியார்மயத்தை ஆதரிக்கும் பாஜ, மக்களுக்காக போராடும் மார்க்சிஸ்டுகளை குறை கூறலாமா என, சிபிஎம் மதுரை மாநகர் மாவட்டக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. சிபிஎம் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கணேசன், வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மாநகரில் முக்கிய வீதிகள், தெருக்கள் முழுவதும் குப்பைகள் தேங்கி இருப்பதுடன், மாநகரின் 11 கால்வாய்களில் குப்பைகள் நிறைந்து கழிவு நீர் கலந்து புதர்மண்டி கிடக்கிறது.
இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. கலெக்டர், மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி மண்டல துணை ஆணையர்களிடம் பலமுறை புகார் மனு கொடுத்து வருகிறது. மதுரை மாநகரில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணிகளை, தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது.
இந்நிறுவனம், மாநகரில் ஏற்கெனவே இருந்த குப்பைத் தொட்டிகளை அப்புறப்படுத்தியதால், சாலைகளில் குப்பைகள் சிதறிக்கிடக்கிறது. மிக சொற்பமான குப்பை லாரிகள் பயன்படுத்தப்படுகிறது. அவையும் போதுமான எண்ணிக்கையில் இல்லை. இதனால் மதுரை மாநகரம் முழுவதும் குப்பைகள் தேங்குவது தொடர்கிறது. தூய்மையற்ற மாநகரங்களின் பட்டியலில் மதுரை முதலிடத்தில் உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் செய்திகள் வந்தது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் இப்பிரச்னை குறித்து கலெக்டர் மற்றும் மாநகராட்சி ஆணையரை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், பாஜவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் மதுரை மாநகராட்சி சீர்கேடு குறித்து மதுரை எம்பி மற்றும் துணைமேயர் ஆகியோர் கண்டுகொள்ளவில்லை என போஸ்டர் வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது. தனியார் மயத்திற்கு ஆதரவாக செயல்படும் பாஜவை சார்ந்தவர்கள் மதுரை மக்கள் மீது எந்தவித அக்கறையும் இல்லாதவரக்ள். இந்நிலையில் விளம்பரம் தேடும் வகையில் போஸ்டர் வெளியிட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கின்றோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
