திருமங்கலம், அக். 7: கள்ளிக்குடி அருகேயுள்ள டி.கொக்குளத்தை சேர்ந்தவர் பால்சாமி.. இவரது மனைவி மீனா (72). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் ஆறுமுகத்தம்மாள் (50). இவரது நாத்தனார் பாகாதாளிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டி மீனா 1.5 சென்ட் இடம் வாங்கி அதில் வீடு கட்டி தற்போது குடியிருந்து வருகிறார். தங்களது பூர்வீக இடத்தை மீனா வாங்கி வீடு கட்டியதால் ஆறுமுகத்தம்மாள் குடும்பத்தினருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆறுமுகதம்மாள் மகன் பகவதி (30), மூதாட்டி மீனா வீட்டிற்கு செல்லும் மின் வயரை துண்டித்துள்ளார். இதனால் அவரது வீடு இருளில் மூழ்கியது. இதுகுறித்து மூதாட்டி மீனா கொடுத்த புகாரின் பேரில் கூடக்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்து வாலிபர் பகவதியை கைது செய்தனர்.