கள்ளிக்குடி, அக். 4: கள்ளிக்குடி பகுதியில் எதிர்வரும் பருவமழைக்கு முன்பாக நாற்று நடும் பணிகளை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது. அப்போது மதுரை மாவட்டத்தின் வடக்குப் பகுதிகளில் ஓரளவு மழை பெய்தாலும், பேரையூர், கள்ளிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் போதிய அளவில் மழை இல்லாமல் போனது. இருப்பினும், இப்பகுதியில் உள்ள வில்லூர், புளியம்பட்டி, கள்ளிக்குடி, அகத்தாபட்டி, வடக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பருவமழையைஎதிர்பார்த்து விவசாயிகள் பலரும் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி பால் ஒட்டு, அட்சயா உள்ளிட்ட நெல் ரகங்களை வயலில் பாவி நாற்றுகளாக உருவாக்கி இப்பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தற்போது நடவு பணிகளை துவக்கியுள்ளனர். இதையொட்டி இவர்கள் தமிழ் கலாசாரம் மாறாமல் நாற்றுக்கட்டுகளை வயலின் ஈசானிய மூலையில் வைத்து வணங்கி குலவையிட்டு நடவுப்பணியைத் துவங்கினர். இம்மாத இறுதிக்குள் பருவமழை போதிய அளவில் பெய்யும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நம்பிக்கையாக உள்ளது.