உண்மைக்கும், எளிமைக்கும் முக்கியத்துவமளித்த மதுரை மக்களின் வாழ்வியலோடு கலந்தவர் மகாத்மா: நாளை (அக்.2) காந்தி பிறந்த தினம்
மதுரை: நாளை(அக்.2) காந்தி ஜெயந்தி கொண்டாடும் நிலையில், மற்ற நகரங்களை விடவும் காந்தியடிகள் மதுரையை, இவ்வூர் மக்களை பெரிதும் நேசித்தார். இதன் வெளிப்பாடாகவே சமய நூல்களையும் அறிஞர்களின் நூல்களையும் படித்து ‘அகிம்சை தான் உயர்ந்த தர்மம்’ என உணர்ந்து இதையே கடைப்பிடிக்கும்படி மக்களுக்கு அறிவுறுத்தி அகிம்சை முறையில் போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்டவர் மகாத்மா காந்தியடிகள்.
அரையாடை அணிந்தது துவங்கி பலதரப்பட்ட வாழ்வியலிலும் மதுரைக்கும் காந்திக்குமான தொடர்பு அதிகம். மகாத்மா ‘காந்தியடிகள் நேசித்த மதுரை’ குறித்து மதுரை காந்திமியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் கூறியதாவது, மகாத்மா காந்தியடிகள் மதுரைக்கு 5 முறை (1919, 1921, 1927, 1934, 1946) விஜயம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசி சுதந்திர விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினார். மதுரையில் பல தேசிய தலைவர்கள் வருகை புரிந்திருந்தாலும் காந்தியடிகள் மட்டும் மதுரையை இதய பூர்வமாக நேசித்தார்.
இவர் மதுரையில் மொத்தம் 125 மணி நேரம் தங்கி இருக்கிறார். அப்போது அன்றைய மதுரை மக்களின் எண்ணங்களையும், செயல்பாடுகளையும் புரிந்துகொண்டு அவர்களுக்கு பல அறிவுரைகளையும் வழங்கியுள்ளார். சுதந்திர போராட்ட காலகட்டத்தில் மதுரைக்கு வருகை புரிந்த அனைத்து தேசிய தலைவர்களுக்கும் மாற்றத்தை கொடுத்து, அவர்களை சிறந்த தலைவர்களாக உருவாகியுள்ளார்.
காந்தியடிகள் மதுரையை நேசிக்க பல காரணங்கள் உண்டு. சுதந்திரப் போராட்ட காலக்கட்டத்தில் மதுரை மக்கள் பெரும்பாலும் காங்கிரஸ் பேரியக்கத்தை சார்ந்தவர்களாகவே இருந்தனர். ஜாதி, இனம், மொழி, சமய வேறுபாடுகளை கடந்து ஒரு குடும்பமாகவே சுதந்திர வேள்வியில் மதுரை மக்கள் களம் கண்டனர். இவர்கள் விருப்பு வெறுப்பின்றி வாழ்ந்து வந்தனர். ஆங்கிலேய ஏகாதிபத்திய கொள்கையை எதிர்க்கும் அஞ்சாமை குணம் இவர்களிடத்தில் இருந்தது.
காந்தியடிகளால் தொடங்கப்பட்ட தேசிய அளவிலான அனைத்து அகிம்சை போராட்டங்களும் மதுரையில் மக்களால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மதுரை மக்கள் உண்மைக்கும் எளிமைக்கும் முக்கியத்துவம் அளித்து அதன்படி வாழ்ந்து காட்டினர். சமய பூசல்களுக்கு ஒருபோதும் இடம் கொடுக்காமல் சமய நல்லிணக்கத்திற்கும், மதுவிலக்கு , தீண்டாமை ஒழிப்பு, கதரியக்கம், சுதேசி இயக்கம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.
இறை பக்தியை விட தேசபக்தியே உயர்ந்த பக்தி என வாழ்ந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் ‘சர்க்கா’(ராட்டை) சுழன்றது. மொத்தத்தில் மதுரை ஒரு பெரிய திறந்தவெளி ஆசிரமமாகவே இருந்தது. எனவேதான் காந்தியடிகள் மதுரையை அதிகம் நேசித்தார். தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, இலக்கியம், தமிழ் மொழி ஆகியவற்றிற்கு மையமாக மதுரை விளங்குவதை காந்தியடிகள் நன்கறிந்தார். எளிமையின் அடையாளமாக விளங்கிய காந்தியடிகள், ஒரு சந்தர்ப்பத்தில் விவசாயி போல் எளிய ஆடை உடுத்தும் வழக்கத்தை மதுரையில் அரங்கேற்றினார்.
அதுவரை மக்களின் மனதில் இடம் பெற்றிருந்த காந்தியடிகள் அன்றே, மக்களின் ஆன்மாவோடு ஒன்றிணைந்தார். எளிய உடையில் சாமானிய மக்களில் ஒருவராக தன்னை இணைத்துக் கொண்டார். எளிய உருவமும், அவரின் கருத்துக்களும் மதுரை மக்கள் மத்தியில் ஆழமான தாக்கம் தந்தது. மேற்கத்திய நாடுகளுக்கும் இந்த அரையாடையுனேயே சென்றார்.
கனவான்களின் உயர்ந்த ஆடைகளை விட காந்தியடிகளின் அரையாடை வலிமையானது. சுதந்திரப் போராட்டம் வலிமை பெறவும் இந்த எளியை ஆடை தூண்டுகோலாக அமைந்தது. மதுரை மண்ணை அதிகம் நேசித்த காந்தியடிகளுக்கு, நாட்டின் முதல் அருங்காட்சியகம் மதுரையில் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் 1959 ஏப்.15ல் திறக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.