மதுரை: ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் ஒன்றிய பல்கலைகழகங்களில் பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 2025-26ம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தல் மற்றும் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாணவ-மாணவியர்களின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவர் ஒருவருக்கு கல்வி உதவித்தொகையாக கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் மற்றும் இதர கட்டாய கட்டணம் ஆகிய கட்டணங்களுக்காக அவரால் செலுத்திய தொகை அல்லது ஆண்டிற்கு அதிக பட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.
இந்த கல்வி உதவித்தொகைக்கு, 2025-26ம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், சென்னை-5, மிகப் பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் நல இயக்ககம், சென்னை-5, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். மேலும், https://bcmbcmw.tn.gov.in/ welfschemes.htm# scholarshipschemes என்ற இணையதள முகவரியிலிருந்தோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஒன்றிய மற்றும் மாநில அரசின் இதர கல்வி உதவித்தொகைத் திட்டங்களின் கீழ் பயன் பெறும் மாணவர்கள், இக்கல்வி உதவித்தொகை பெற தகுதியற்றவர்களாவர். 2025-26ம் நிதியாண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை, பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு இனத்தவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பு இனத்தவருக்கு மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறைக்கும், பரிந்துரை செய்து புதிய விண்ணப்பங்களை அக்.31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.