மதுரை, ஜூலை 31: வைகை ஆற்றின் கீழ் பாசன வசதி பெறும் கண்மாய்களில் முக்கியமானது செல்லூர் கண்மாய். கடந்தாண்டு அக். 25ம் தேதி பெய்த கனமழையால் இக்கண்மாயிலிருந்து உபரிநீர் வெளியேறி ஊருக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து ரூ.15.10 கோடியில் புதிதாக சிமென்ட் கால்வாய் கட்டும் பணிகள் தொடங்கின. கடந்த மாத இறுதியில் செல்லூர் - குலமங்கலம் சாலையில் வைகை ஆற்றில் கால்வாய் கலக்கும் இடம் வரை, சிமென்ட் கால்வாய் கட்டுமான பணி முடிக்கப்பட்டது.
தொடர்ந்து, கண்மாயில் உள்ள ஆறு பழைய மதகுகளை அகற்றி புதிதாக மதகுகள் பொருத்துவதற்கான பணிகள் துவங்கின. இதன்படி, கண்மாயின் பிரதான பகுதிகள், பந்தல்குடி கால்வாயிலிருந்து தண்ணீர் வெளியேறும் பகுதி மற்றும் ஆற்றில் கால்வாய் முடியும் இடம் உள்ளிட்டவற்றில் புதிதாக ஷட்டர்கள் பொருத்துவதற்காக கான்கிரீட் தளம் கட்டும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, ஷட்டர்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.