மக்களை தேடி வரும் மருத்துவ உதவிகள் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார்
மதுரை: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் ஊரக பகுதிகளில் ஒரு வட்டாரத்திற்கு 3 வீதம் 39 முகாம்களும், மாநகராட்சி பகுதிகளில் 5 முகாம்களும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பிரதி சனிக்கிழமை தோறும் 17 சிறப்பு மருத்துவர்களை கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாம்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவ பரிசோதனைகளுடன், முழுமையான உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்படும். இத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலியில் தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து மதுரையை அடுத்த ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது:
இம்முகாமில் 17 மருத்துவத்துறை தொடர்பான சிகிச்சைகள் மட்டுமல்லாது, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக 5 காச நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும், ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால்களையும் அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.இந்நிகழ்வில் கலெக்டர் பிரவின் குமார், சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன், மதுரை அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஸ்குமார், சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் செல்வராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் குமரகுருபரன், திட்ட இயக்குநர் வானதி, ஒன்றிய செயலாளர்கள் அ.பா.ரகுபதி, மதிவாணன், முன்னாள் ஒன்றிய சேர்மன் வீரராகவன், துணை சேர்மன் பாலாண்டி, தலைமை கழக வழக்கறிஞர் கலாநிதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அண்ணாமலை, ஆனந்த், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி ஒத்தக்கடை சரவணன், மருத்துவர் அணி மகுடபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.