சோழவந்தான், ஜூலை 20: சோழவந்தான் அருகே திருவேடகம் எல்லைக் காளியம்மன் கோயிலின் 29ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா, கடந்த வாரம் செவ்வாய் சாட்டுதலுடன். துவங்கி 9 நாட்கள் நடைபெற்றது. விழாவில் தினமும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்து, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தும், பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் வழிபட்டனர்.
திரளான பக்தர்கள் வைகையாற்றிலிருந்து அலகு குத்தியும், அக்னிச்சட்டி, பால்குடம் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட முளைப்பாரி ஊர்வலமும் நடைபெற்றது. விழா நாட்களில் ஆன்மீக சொற்பொழிவு, நாடகம், கும்மிப்பாட்டு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள், அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை திருவேடகம் கிராம மக்கள் செய்திருந்தனர்.