பேரையூர், பிப். 19: பேரையூர் தாலுகா, எழுமலை அருகே இ.பெருமாள்பட்டி உள்ளது. இந்த ஊரிலுள்ள அம்மன் கோயில் கும்பிடுவதில் அங்கு ஒரே சமுதாயத்தில் இரு பிரிவினர்களாக உள்ளனர். அதில் ஒரு பிரிவினர் அம்மன் கோவிலில் நேற்று அம்மன் சிலையை கொண்டு வைத்தனர். மற்றொரு பிரிவினர் அம்மன் சிலை வைப்பது தவறு என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரு தரப்பினர்களிடையே பிரச்னை ஏற்பட்டு தகராறு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்து வந்த பேரையூர் தாசில்தார் செல்லப்பாண்டி, மற்றும் எழுமலை போலீசார் இரு பிரிவினர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், அதற்கு இருபிரிவினர்களும் ஏற்றுக் கொள்ள மறுத்ததால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க உரிய அனுமதி பெறாமல் கோயிலில் வைத்த அம்மன் சிலையை பறிமுதல் செய்து தாசில்தார் செல்லப்பாண்டி தலைமையில் வருவாய்த்துறையினர் பேரையூர் தாலுகா அலுவலகம் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


